Monday, June 9, 2008

இரண்டு தடவைகள் வாழ்கிறாய்

















அனைத்து சலனங்களினையும் அடக்கி
என் மூச்சைத் திருடி
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.

இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்
உருக்குலைய வைத்து
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.

உன்னை முதலினைப்படுத்தி
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென
பல கோடி தடவை கெஞ்சினேன்.

உன் அசட்டுக் காதுகளும்
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்
என் உடலின் இரு அந்தங்களிலும்
மீசான் கட்டைகளை செருகி விட்டது.

எனக்கேயான எனது அனைத்தினையும் மறுத்தாய்.
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்
என்னையும் ஓடவிட்டு
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

நீ உலகில்
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.

09.06.2008

கொலைகளின் தேசத்தில் பிறந்தேன்.


எனது இரவுகளை
தூக்கமென்ற அடர்ந்த உலகினுள் புதைக்காமலும்
எனது பகல்களை
சோம்பலேறிப்போன வேலைத்தளத்தினுள்
அடமானம் வைக்காமலும்
எனது இன்றைய நாட்கள் நகர்கின்றன.

கரை தட்டும் கடலின் ரகசியம் போல்
ஒவ்வொரு நிமிடமும்
புதிர்களும் வினாக்களும் நிறம்பிய உலகமும்,
என்னில் விழுந்து விழுந்து எழும்புகிறது.

கனவுகளின் காலைகளை
இராட்சத விலங்கொன்று விழுங்கிற்று.
சமாதானம் பேசச்சென்று
வெட்டுண்டு விட்டதன் செய்திகளே
காலை அழைப்பாக தொலைபேசியில்.

உதடுகள் இரண்டினையும் இறுக மடக்கி
விரல்களைப் பொத்தி கைக்குள் வைத்து
உன்னைக் கேட்கிறேன்.

கொலைகளின் தேசத்தில் ஏன் பிறப்பாக்கினாய்.

07.06.2008

நாட்கள் மெலிந்தன

அனைவரும் போல நீயுமானாய்.


பகல்களை சூரியனிடமிருந்து பிடுங்கி

அனைத்தினையும் இருளாக்கிடும் விடயமாய்
நான் இதை நினைத்திருக்கவில்லை.


என்னிலைகளை புரிந்து கொண்டு
காலமெல்லாம் நீ பேசிய அனைத்தையும்
மறந்து
உன்னிலை காப்பிற்காய்
துக்கியெறிந்து முகம் மாற்றி
நீண்ட வெளியில் எதுவுமற்று என்னை
உன்னால் நிரப்பிவிட்டு சென்றாய்.

இருப்பினும்,
நீயும் உன் நினைவுகளும்
குளிர் காலத்து உன் சிறகுகளும் போதும்.
என்னை முந்தியடித்து
உன்னோடு எனக்குள் வாழ்வேன்.

நாட்கள் மெலிந்து கிடக்கின்றன.

01.06.2008.

காறித் துப்பி எழும்புவோம்


அறிவாக நினைத்ததெல்லாம்
மையத்துக்களை விருந்தாகத் தந்தது.
என்னை நிறப்பி ஒட்டி சீர்செய்யும் உன்
அனைத்து கைங்காரியங்களும் சிதறிப்போயின.

உன் இதுவரைக்குமான ஜீவிதத்தில்
நீ கேட்டதெல்லாம்
உன்னை அதிகாரப்படுத்தியே.


உன்னை ஒதுக்கிவைத்து விட்டு
எந்த அறிவினையும் நாங்கள் பெற்றிடாத படி
நீ
எங்களில் உன்னை
உறுதியாய் வார்த்திருக்கிறாய்.


நாங்களிழந்த கால்களினாலே
உன்னை எட்டியுதைத்து
உன் மொத்த இருப்பின் மீதும்
காறித் துப்பி
நாங்கள் திடமாய் எழும்பிவோம்.


என் தேசத்தின் அனைத்திற்குமாய்
எங்களிலிருந்து நாங்கள் எழும்புவோம்.

30.05.2008

Friday, May 30, 2008

இன்னுமொருவனும் கற்பழித்தான்.


எந்த தாட்சன்யமுமின்றி
நான் மீளவும் வல்லுறவுக்குள்ளானேன்.


கேவலத்தால் கசிந்து கிடந்தயென்
கருப்பைக்குச் சொந்தமான குருதியின் சாட்சியாய்
நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன்.


ஆயிரம் திசைகளாய் என்னையிழுத்து
அவரவர் விருப்பம் போல்
அக்குள் தொடக்கம் அனைத்தும் வரை
வெறிபிடித்த நாயின் வேகத்தில் குதறித்தள்ளினர்.


நான் பெத்துப் போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.


இடைவேளையின்றி
காபிர்களே படுத்தெழும்பிய என்னில்
சுன்னத் செய்யப்பட்ட கயவனும்
தாரளமாய் விழுந்தெழும்பினான்.


இறுதியாய் இன்று பகலும்,

மூட்ப்படாத நீள ஆடைகளைந்து
அகிம்சா தர்மத்தின் போர்வையும்
என்னைக் குதறியெடுக்க மன்றில் நிற்கிறது.

நான் பெத்துப்போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.

26.05.2008

Friday, May 16, 2008

அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது

என்னிடமிருந்த வண்ணாத்திகள் சிறகுகள் கொடுக்கப்பட்டு பறந்தன.

காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே
கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.

என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல்
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.

நீண்ட தூரங்கள் கடந்துசென்று
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்
ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.

வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.

வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால்
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
நீல நிழலின் அழகில் நின்றது.

காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல்
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.

நிறங்களுடன் பெய்த பெருமழையில்
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.

நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணாத்திகளின்
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது
சிறிய கடலின் நீண்ட வெளியில்
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{ பிரியுமாறும் எழுதப்பட்டது.

பெருவெளி இதழ் 05

உனதும் எனதும் உறவும் பிரிவும் பற்றிய பாடல்


எனக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில்
நீ உன் பெருங்கவிதையினை வாசித்தாய்.
அன்றைய பொழுதின் வேகத்தினையும் விட உன் கவிதைச் சொற்களின்
கூர்மையாக்கப்பட்ட வேகம் மிகவும் வலுத்திருந்தது.

உன் பெருங்கவிதையின் ஒவ்வொரு உச்சரிப்பின் பின்னும்
நான் அதற்கென அரசியல் கண்டுபிடித்தேன்.
உன் பெருங்கவிதைக்குள்ளே உணர்ச்சி, சுயம், ஆழம், தூய்மையென
அனைத்து மனிதமும் நிறைவாய் இருந்தது.
நீ மிக உயர்ந்த இடங்களில் எழுந்து நின்று
~என் கவிதைகள் நமக்கே| யென உரத்த குரலில்
என்னை அரவணைத்துக்கொண்டு முழங்கினாய்.

உன் கவிதை எனக்கும் இனித்தது
உன் கவிதை எனக்கும் உறைத்தது
உன் கவிதை எனக்கும் உயிரானது
உன் கவிதை எனக்கும் பலமானது
உன் கவிதை எனக்கும் வலுத்தது
உன் கவிதை எனக்கும் எனக்கானது
உன் கவிதை என்னையும் எழுப்பியது

நீ உன் கவிதையில் அன்பை விதைத்து நாமொன்று என்றாய்
நமது இனங்களின் தொடக்கங்களை இணைத்தாய்
நமது குடிப்பரம்பலை நிறுவினாய்
நாம் இறைவனால் இணைக்கப்பட்டோமென்றாய்
நம்மை பிரித்துவிட்டார்களென்றாய்
நாம் இணைந்து கொள்வோமென்றாய்
நமக்கென நிலம் வேண்டுமென்றாய்
நமக்கென புதிய வரலாற்றினை எழுதினாய்.

நான் உன் கவிதையினை புரிந்துகொண்டேன்
அப்போதெல்லாம் நீயும் என்னை அரவணைத்தாய்
உன்னுடன் உறவாடுவது என்னை எனக்குப்பிடித்ததினை விட பிடித்துப்போனது

மகத்தான ஆரம்பங்களுடன் நம்பயணம் தொடங்கிற்று.
உன் கவிதைக்குள் என்னையறியாமலே நான் புதைக்கப்பட்டேன்.
நீயும் உன் கவிதையும் எனக்கும் என நீ கூறியதால்
உன் பெருங்கவிதையெனக்கு பலமென நம்பி
இறுதியில் உனக்குள்ளும் உன் கவிதைக்குள்ளும் சரணாகதியானேன்.

நீ எழுதிய வரலாற்றில் காலம் ஓடியது
உன் பெருநில கவிதையின் சொற்கள் மாறின
உன் நிகழ்ச்சி நிரல்கள் எங்கோ நிர்ணயிக்கப்பட்டன
உனக்குள் இருந்த ஆரம்பங்கள் தொலைந்தன.
எனக்கும் உனக்குமான காதலால்

நீ பலமடைந்த பொழுதுகளை மறந்தாய்
திடிரென என்னையும் நம் காதலையும் நிராகரித்தாய்
உன்னையே நம்பிய பாவத்திற்காய்
முஸல்லாவிலே பலிக்கடாவாக்கினாய்
எனது அறிவகங்களின் கற்பை அழித்தாய்
பாங்கிற்காய் உயர்ந்த குரல்களை அறுத்தாய்
நிர்வாணமாக்கி என் நிலத்திலிருந்தே துரத்தி
நடுத்தெருவிலும் அடர்ந்த காட்டிலும் விரட்டி விரட்டியடித்தாய்.

உன் அன்பின் பின்னரசியல்
இவ்வளவு வக்கிரமென நான் நம்பியிருக்கவில்லை.
நீயடித்த அடியில் என் காதல் போதை கலங்கியது
நானும் நீயும் வேறென அறிந்தேன்.

தேடிப்பார்த்த போது
உனக்குமெனக்கும் வெகு தூரம்.
நீ காட்டிய காதல் பொய்
நீ கூறிய உலகம் பச்சப்பொய்
நீ நிறுவிய அனைத்தும் பொய்
நீயெழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை.

என் வலிகள் என்னைத்தேடியலைந்தன...

நீ வேறு நான் வேறு
எனதும் உனதும் மொழிகள் வேறு
எனதும் உனதும் பொழுதுகள் வேறு
எனதும் உனதும் சூரியனும் சந்திரனும் வேறு
எனதும் உனதும் நாட்களும் நிமிடங்களும் வேறு
எனதும் உனதும் கவிதைகளும் பாடல்களும் வேறு
எனதும் உனதும் மொத்தமும் வேறு வேறு.
நீ விரட்டும் போது உனக்கு நான் வேறு
அதை நான் கூறும் போது
உன் வன்முறையெனக்கு மீது.

நிச்சயமாக,
எனதும் உனதும் அனைத்தும் வேறு
நம் நன்றிகள் கூட வேறு
நமது கவிதையும் பாடலும் வேறு வேறு என்பது போல.

- பெருவெளி இதழ் 05

Monday, March 24, 2008

இடைமறிக்கும் உயர்ந்த கோஷங்கள்


அவர்கள் வரப்போவதாய் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்

மீண்டும்,
பச்சை மஞ்சள் நீலம் சிவப்பு வெள்ளை என்பனவும்
ஆயிரம் பாகமாய்ப் பிரிந்த நிறங்களும்
அவற்றின் இணையாத கலவைகளும்
பொலீதீன்களோடு இணைந்து கொடிகளாயிற்று.

தலைவர் வருவாராம்
உயர்த கோஷங்களெல்லாம் இடைமறிக்கும்
உணர்சிகள் வீதிகளில் நடமாடும்
மாடு தின்பதற்காய் மதில்களில் போஸ்டர்கள் இருக்கும்.

மிகத்தூரத்தில் அதுவும் வானத்திலிருந்து
மறைந்தவர் கவனிப்பதாய் ஒரு அலங்காரம்

பாவம்,

அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்
எல்லாம் மறந்து தனித்துவத்திற்காய் நாமெல்லாம்
உச்ச ஸ்தாயியில் கோஷம் முழங்குவம்.

மீளவும்
மிக இருட்டிய இரவுகளில்
கருமை மேலெழுகிறது விடியலிற்காய்.

2003.07.03

Saturday, January 12, 2008

எல்லாமே முடிஞ்சு போய்ச்சு..

பின் இரவின் கருக்களினூடாய்
ஆந்தையின் மரணச்செய்தி கேட்டேன்.


என் இருதயத்தில் அடிக்கடி மோதிவிடும்
ஒரு சுவாசத்திற்கான படியாய்
இந்த ஆந்தையின் அலறல் விழும்.
என் இரவுகளின் கடத்துகைக்கு
மிக உட்சாகமாய் துணைவருவதும் இதுவே.

ஆனால்,

இறைவனின் விதிக்கோலங்களில்
வாழ் நாட்களிற்கான இணைபாடியாய்
இணைந்த அலறல்களுடன் வாழ்ந்தோம்.
அன்பின் மையச்சுவையின் திளைத்தலில்
பல நூறு காலம்
உயிர்ப்புப்பெற்ற ஆந்தைகளாய் இருந்தோம்.

சற்றென்று,
எங்களின் வாசஸ்தளத்தில்
மிகப் பெரியதொரு விண்கல் விழுந்து
நூற்றாண்டுகால மரக்கிளை மாளிகையை
அடையாளமின்றி துவைத்துவிட்டது.


அன்று அலைந்த ஆந்தையின்
மரணச்செய்தி இன்று கேட்டது.

நிமிர்ந்தும் பார்க்க முடியாமல்
என்னை விட்டுச்சென்றது அலறும் ஆந்தை.

எல்லாம் முடிஞ்சு போய்ச்சு..

01.01.2008

Tuesday, November 13, 2007

“மறைந்து கிடக்கும் இசை பற்றிய காதல்”

மிக மெளனமாய் உன்னை ஆராய்திருக்கிறேன்
ஒரு கோடி மழைத்துளிகள் இணைத்து

உன் உருவத்தினை நான் செய்த போதும்

அதனையும் தாண்டி நீ வேறு உருவமானாய்.


என்னைக் கட்டிப்போட்டுவிட்ட உன் வார்த்தைகளும்
அதனை மிஞ்சிய பார்வைகளும்

உன் மெளனமான பொழுதுகளில்

என் உயிரினைக் குடித்துவிடுகிறது.

காமம் ஒருசொட்டும் கலக்காத இந்த காதல்

இன்றென்னை துரத்தித் துரத்திக் கொல்கிறது.

என்னைவிட
நானுன்னை நேசித்த அனைத்துப் பொழுதுகளும்

வெறிச்சோடி தூர்ந்து போய்க்கிடக்கிறது.


நீ இன்றென்னைப் பார்ககவுமில்லை,
மன்னிக்கவும்

உன்னைப்பார்க்க என்னால் இயலவில்லை.


ஏதேதோ கேட்டாய் இன்றென் முன்
பிதற்றல்கள் நிறைந்த என் பதில்களும்

உன் கண் பார்க்காத என் பார்வையும்

உனக்கு அச்சத்தினை தந்திருக்கும்.

உன்னிடம் பொய் சொன்ன முதல் நாளின்று.


இன்று நீ இழந்து நிற்பவைகளை விட
நான் இழந்து நிற்பவைகளேயதிகம்.
உன்னைக்காண வரவே கூடாதென்கிறேன்.


என் இரவுகளில் துணையிருக்கும்
கடலின் மீது வழியமைத்து

இறைச்சலடங்கிய அதன் நடுவில் நான்

தனித்து விடப்பட வேண்டும்.

நிறுத்தப்பட்ட கடிகாரமாய் இருந்துவிட
என் மனம் ஆசைப்படுகிறது.
நினைப்புக்கள் எதுவும் தேவையில்லை,

நீயழைக்காத பொழுதின் துன்பம் இனியும் வேண்டாம்.


இயங்க முடியவில்லை
நிறுத்தப்பட முடியவில்லை.

03.11.2007

Friday, October 26, 2007

பெருவெளி இதழ் 04 வெளிவந்து விட்டது..

முஸ்லிம் தேசத்தின் எழுத்து இயங்கியல்களில் ஒன்றான பெருவெளியின் 04வது இதழ் வெளிவந்து விட்டது.

www.peruveli.blogspot.com

Friday, August 24, 2007












உனக்கு அடையாளம் காட்டப்படும் உறவுகளை விட
நீ கண்டு கொள்பவைகள் பலமானவைதானே...

Wednesday, August 22, 2007

ஏனைய Link

முஸ்லிம் தேசத்தின் நிலத்துண்டுகளில் ஒன்றான அட்டாளைச்சேனை இணையத்தில் இடம்பெற்றுள்ளது..

அதற்குள் நுழைந்து கொள்ள
http://addalaichenai.blogspot.com இதனை அழுத்தவும்.

Sunday, August 19, 2007

வானங்கள், பூமிகள் மீது சத்தியமாக... -அல் குர்ஆன்-

குளிர்ந்து கிடக்கும் என் நிலத்தின்
குளிர்ச்சியடையும் முன்னான
மூக்கையரிக்கும் மிக இனிய சுவாசத்தினிதம்
மனதினுள்ளே புதைந்து புதைந்து விருட்சமாகி விட்டது..

அந்த நினைவனுபவத்தின் முதிர்ச்சிகள்
உன் மீதான வாசிப்பின் பின் பகிர்தலில்
உன்னாலே காவு கொள்ளப்படுகிறது.

எனது மிகச்சிறிய பருவத்தின் ஆரம்பமே
உன் காவுகளின் பிரதிகளை
என்மீது பதியவிட்டுக்கொண்டே வளர்ந்தது.
நீங்கள் எத்தனைபேர்/நிலங்கள்
காவுக்காய் அல்லாஹ்வால் படைக்கப்பட்டீர்கள்..?
சில இடங்களில் தமிழிலுள்ள கெளரவ வசனங்களால்
நீ முகமறைக்கிறாய்
"அதுவொரு துன்பியல் நிகழ்வு".

இசை நிரம்பிக்கிடக்கும்
எனக்கேயான நீண்ட கடலினை காவிவிட்ட சுனாமியைவிட
உன் ஆணவமும் திமிரும் மிகக்கடும் கொடிய கேவலம்.

உன் பலவீனங்களுடன்
நீதானே திரையிட்டுக்கொண்ட அதிகாரம்.

இறுகிப்போன உனது அதிகாரம்
மழைபோல் கொட்டித்தீர்த்துவிட்டு
செய்வதறியாது திகைத்து நிற்பாய்/நிற்கும் எப்போதும்,

உன்னிடம்தானே நிறம்பிக்கிடக்கிறது
கெளரவ வசனங்கள்.


04.07.2007

http://peruveli.blogspot.com
http://addalaichenai.blogspot.com

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..